’ எறும்பு’ திரைப்பட விமர்சனம்
விவசாய கூலியாக இருக்கும் சார்லி, முதல் மனைவி இறந்ததால் இரண்டாவதாக சூசனை திருமணம் செய்துக் கொள்கிறார்
முதல் மனைவிக்கு இரண்டு பிள்ளைகள் இருக்க சூசனுக்கு ஒரு குழந்தை இருக்கிறது கடன் தொல்லையால் கஷ்ட்டப்படும் சார்லி தனது மனைவி சூசனுடன் கரும்பு வெட்டும் கூலி வேலைக்காக வெளியூர் சென்று விடுகிறார் அப்போது சூசனின் குழந்தை மோதிரத்தை எடுத்து சிறுவன் சக்தி கார்த்திக்கிடம் அவரது பாட்டி கொடுக்க விளையாடும் போது அந்த மோதிரத்தை சிறுவன் தொலைத்து விடுகிறான்
மோதிரம் தொலைந்த விஷ்யம் சித்திக்கு தெரிந்தால் அடித்தே கொன்று விடுவார் என்று பயப்படும் சிறுவன் விஷயத்தை தனது அக்காவிடம் சொல்கிறான்
பாட்டியிடம் கூட விஷயத்தை சொல்லாமல் தொலைந்த மோதிரத்திற்கு பதிலாக புதிய மோதிரம் வாங்கி வைத்துவிட முடிவு செய்யும் இருவரும் அதற்காக பல்வேறு வேலைகளை செய்து பணம் சேர்க்கிறார்கள்
மறுபக்கம் வேலைக்கு சென்ற இடத்தில் கிடைத்த பணத்தை வைத்து கடனை அடைக்க முடியாது என்பதால் வேறு வழியில் பணம் புரட்டும் முயற்சியில் ஈடுபடும் சார்லி மோதிரத்தையும் அடகு வைக்க முடிவு செய்கிறார் மோதிரம் வாங்கும் அளவுக்கு பணம் சேர்க்க முடியாமல் சிறுவர்கள் தடுமாறுகிறார்கள்
இறுதியில் மோதிரம் சார்லியின் கடன் பிரச்சனையை தீர்த்ததா?
அல்லது சிறுவர்களை பிரச்சனையில் சிக்க வைத்ததா?
என்பதை சுவாரஸ்யமாக சொல்வது தான் ‘ எறும்பு ’
சார்லி, சூசன், ஜார்ஜ் மரியன், சிறுமி மோனிகா சிவா, சிறுவன் கார்த்திக் ரித்விக், பாட்டி பறவை சுந்தரம்பாள் ஆகியோரை சுற்றி நகரும் கதையில், படம் பார்ப்பவர்களும் சேர்ந்து பயணிக்கும்படி மிக இயல்பாக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.ஜி.
சிறுமி மோனிகாவும், சிறுவன் சக்தி ரித்விக்கும் நடிப்பில் மிரட்டுகிறார்கள் கிராமத்தில் வாழும் நிஜ அக்கா, தம்பி போலவே படம் முழுவதும் வலம் வரும் அவர்களது ஒவ்வொரு அசைவும் திரையில் இருந்து நம் கண்களை அகல விடாமல் பார்த்துக் கொள்கிறது
அதிலும், சிறுமி மோனிகா, இறந்த தனது தாயை நினைத்து செயல்படாத போனில் “அம்மா…அம்மா…” என்று சொல்லி அழும் காட்சியில் நம்மை கண்கலங்க வைத்துவிடுகிறார் அதேபோல் தனது தம்பி பயப்படும் போதெல்லாம் ஆறுதல் சொல்லி அவனை தேற்றி அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் அன்னையாக இருந்து தனது தம்பியை வளர்க்கும் காட்சி அருமை
விவசாய கூலியாக நடித்திருக்கும் சார்லி தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்
விவசாயிகளின் அவல நிலையை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கும் சார்லி அவர்களுடைய நம்பிக்கை மற்றும் விடா முயற்சியையும் தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்
சார்லியின் மனைவியாக நடித்திருக்கும் சூசன் ஜார்ஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல வேடத்தில் கவனம் ஈர்க்கும்படி நடித்திருக்கிறார்
செயல்படாத செல்போனில் தொடர்பில் இல்லாதவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் ஜார்ஜ் மரியன் தனது நடிப்பு மூலம் சிரிக்க வைப்பதோடு தான் பேசும் வசனங்கள் மூலம் சிந்திக்கவும் வைக்கிறார்
வட்டிக்கு பணம் கொடுப்பவராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், பாட்டி பறவை சுந்தரம்பாள், கங்கானியாக நடித்திருக்கும் ஜெகன் ஆகியோரும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர் கே.எஸ்.காளிதாஸ் எளிமையான கிராமத்தை மிக அழகாக காட்டியிருப்பதோடு அந்த கிராமத்தில் நம்மையும் பயணிக்க வைக்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்
அருண் ராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும் கதையோடு பயணிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது
பின்னணி இசை சிறுவர்களின் நடிப்பை போல் இயல்பாகவும் மென்மையாகவும் பயணிக்கிறது
எளிமையான கருவுக்கு மிக எளிமையான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் சுரேஷ்.ஜி, முழு படத்தையும் மிக சுவாரஸ்யமாக நகர்த்தி சென்று இறுதியில் நல்ல சிறுகதை படித்த உணர்வை கொடுக்கிறார்
படத்தின் ஆரம்பத்தில் திரைக்கதை மெதுவாக நகர்வது போல் தோன்றினாலும் புதிய மோதிரம் வாங்குவதற்காக சிறுவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் போன்றவை திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரித்து நம்மை இருக்கையில் கட்டி போட்டு விடுகிறது
சிறுவர்கள் கொண்டாடி பார்ப்பதற்கான ஒரு படமாகவும் சினிமா ரசிகர்கள் பாராட்டும் நல்ல படைப்பாகவும் கொடுத்திருக்கிறார்
மொத்தத்தில் இந்த ‘ எறும்பு ’ சிறுவர்களை மையப்படுத்திய கதை என்றாலும் பெரியவர்களும் ரசித்து பார்க்க கூடிய திரைப்படமாக இருக்கிறது.