ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை அறிமுகப்படுத்தும் ஏவிஎம் ஸ்டுடியோஸ்

Share the post

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை அறிமுகப்படுத்தும் ஏவிஎம் ஸ்டுடியோஸ்

கடந்த 77 வருடங்களில் 178 படங்கள் வரை தயாரித்துள்ள ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. இந்தியாவிலேயே மிக பழமை வாய்ந்த நிறுவனமாக இருந்தாலும் ஏவிஎம் குடும்பம் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை கட்டமைத்து கொண்டு தனது பெருமையையும் புகழையும் தன்னிடத்தில் தக்க வைத்துள்ளது,

புதுமைகளை, படைப்புகளை வழங்குவதில் முன்னோடியாக இருந்த எங்களது நிறுவனர் திரு ஏ.வி மெய்யப்ப செட்டியார் அவர்களின் பாதச்சுவடுகளை பின்பற்றி ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. சினிமா வரலாறு மற்றும் பெருமையை கொண்டாடும் விதமாக அதேசமயம் கவனமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள். உபகரணங்கள் மற்றும் அரிதான இயந்திர சாதனங்கள் என இந்த மியூசியம் பார்வையாளர்களுக்கு ஏவிஎம் நிறுவனத்தின் பெருமை வாய்ந்த வரலாறை உடனடியாக உணரும் வாய்ப்பை கொடுக்கும்.

இந்திய திரையுலக வரலாற்றில் பல புதுமையான விஷயங்களை புகுத்தியதில் ஏவிஎம் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பெருமை உண்டு. முதல் மொழிமாற்று திரைப்படம் (ஹரிச்சந்திரா 1944), முதன்முறையாக பின்னணி பாடுவதை அறிமுகப்படுத்திய முதல் படம் (நந்தகுமார் 1938), இசைக்கு ஏற்ப பாடல்களில் பின்னர் உதட்டசைவை பொருத்தி கொள்ளும் முறையை கொண்டு வந்த முதல் படம் (ஸ்ரீவள்ளி 1945), பாடல்களே இல்லாமல் உருவான முதல் தமிழ் படம் (அந்த நாள் 1954), நடிகர்களை அனிமேஷன் உருவங்களுடன் இணைத்து உருவாக்கிய முதல் படம் (ராஜா சின்ன ரோஜா 1989), சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்காக ஜவஹர்லால் நேரு கோல்டு மெடல் விருது பெற்ற படம் (ஹம் பாஞ்சி ஏக் தால் கே இன் 1957), டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தை முதலில் பயன்படுத்திய படம் (சிவாஜி 3D 2007) ஆகியவை நம் நிறுவனத்தின் புதுமைகளையும் மதிப்பீடுகளையும் புகுத்தியதற்கான சில சிறந்த உதாரணங்கள்.

திரு சி.என் அண்ணாதுரை, திரு மு.கருணாநிதி, திரு எம்.ஜி.ராமச்சந்திரன், திரு என்.டி.ராமராவ் மற்றும் டாக்டர். ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றிய பெருமையை ஏவிஎம் நிறுவனம் கொண்டுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் திரு. மு.கருணாநிதி அவர்கள் எழுதிய வலிமையான கதை மற்றும் சீற்றம் மிகுந்த வசனங்களை கொண்டு ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் முகத்தையே மாற்றியது. அந்த படம் சமூகப்புரட்சியை ஏற்படுத்தியதுடன் திரைப்படங்களில் சமூகநீதி இருக்கவேண்டும் என்பதையும் அறிமுகப்படுத்தியது. இந்த புரட்சிகரமான படத்தில் ‘வெற்றி வெற்றி வெற்றி என்கிற தனது முதல் வார்த்தைகளை பேசி நடிகராக அறிமுகமானார் புகழ் பெற்ற நடிகரான சிவாஜி கணேசன். அவரது முதல் காட்சி எடுக்கப்பட்ட அந்த பொன்னான தருணம் நினைவுச்சின்னமாக இந்த ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு நினைவு கூரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *