முதல் முறையாக பான் இந்தியா இசையில் தடம் பதித்த டி ஆர்

Share the post

Tamil and English Press Release:

‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ பாடல் மூலம் தனது பேரன் மாஸ்டர் ஜேசன் உடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி இசை உலகில் முத்திரை பதித்தார்

தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும் இசை மூலம் பல படங்களுக்கு பிளாட்டினம் டிஸ்க் வாங்கிய இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான டி ராஜேந்தர் பான் இந்தியா இசையில் முதல் முறையாக ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிட்டுள்ளார்.

தனது பேரன் மாஸ்டர் ஜேசன் உடன் இணைந்து அவர் உருவாக்கியுள்ள இந்த தேச பக்தி ஆல்பத்தை தனது டி ஆர் ரெக்கார்டஸ் மூலம் இன்று வெளியிட்டார்.

இது குறித்து பேசிய அவர், “ஆங்கில புத்தாண்டு 2023 சமீபத்தில் பிறந்துள்ளது. புத்தாண்டு இது புத்துணர்வு தரும் ஆண்டாக, புதுமைமிக்க ஆண்டாக, பூரிப்பு தரும் ஆண்டாக, மக்களுக்கு மன மகிழ்ச்சி தரும் ஆண்டாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து எனது வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

புத்தாண்டு மலர்ந்துள்ள தை மாதம் பிறந்துள்ள இந்த தருணத்திலே எனது டி ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற ஆடியோ மற்றும் மியூசிக் வீடியோ மலர்ந்துள்ளது என்கிற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு தலை ராகம், வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், ராகம் தேடும் பல்லவி, நெஞ்சில் ஒரு ராகம், உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி, எங்கள் வீட்டு வேலன், பெற்றெடுத்த பிள்ளை, ஒரு வசந்த கீதம், தாய் தங்கை பாசம், மோனிஷா என் மோனாலிசா, சொன்னால் தான் காதலா, காதல் அழிவதில்லை, வீராசாமி… இப்படி என் படவரிசைகளில் எத்தனையோ பாடல்கள் இசையில் ரெக்கார்ட் பிரேக் பண்ணியிருக்கின்றன.

கிளிஞ்சல்களுக்காக பிளாட்டினம் டிஸ்க் வாங்கினேன், பூக்களை பறிக்காதீர்கள், பூ பூவா பூத்திருக்கு, பூக்கள் விடும் தூது, கூலிக்காரன் இவை அனைத்தும் ரெக்கார்ட் பிரேக். இப்படி ரெக்கார்ட் பிரேக் செய்த நான், என்னுடைய கம்பெனிக்கு டி ஆர் ரெக்கார்ட்ஸ் என்கிற பெயர் வைத்துள்ளேன்.

நான் படத்திற்காக பாட்டெழுதியுள்ளேன், கழகத்திற்காக, கட்சிக்காக, ஏன் காதலுக்காக, பாசத்துக்காக கூட பாட்டெழுதியுள்ளேன். இப்பொழுது முதன் முதலாக இந்த பாரத தேசத்திற்காக ஒரு பாட்டு ‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ என்கிற பாடலை அகில இந்திய கான்செப்டில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கியுள்ளேன்,” என்று கூறியுள்ளார்.

மேலும், தனது புதிய முயற்சிக்கு நாடெங்கிலும் உள்ள மக்கள் தங்களது பேராதரவை வழங்குவார்கள் என்று டி ஆர் நம்பிக்கை தெரிவித்தார்.

உஷா ராஜேந்தர், ஆர்ஆர் மூவிஸ் ரமேஷ் மற்றும் கின்னஸ் பாபு கணேஷ் ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தேசபக்தி பாடலின் டிஜிட்டல் பார்ட்னர் பிலீவ் ஆகும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *