
ஏழு கடல் ஏழு மலை என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைக் கரு :- ஒரு பெண்ணின் காதலை மையப்படுத்தி கதாநாயகனின் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது இதுதான் இக் கதையின் மையக் கரு .
என்ன தான் உழைத்தாலும் , என்ன தான் வாழ்ந்தாலும் ஓர் ஆணுக்கு பின் ஒரு பெண் இல்லை என்றால் அந்த ஆணின் வாழ்க்கை சிறக்காது.
பல நூறாண்டுகளாக தனது காதலியைத் தேடும் அந்தக் கதைநாயகன் நிஜ வாழ்க்கையில் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அன்று தீபாவளி. அந்தத் தீபாவளி இரவில் இரயில் ஒன்றின் முன் பதிவு இல்லாத கடைசிப் பெட்டியில் கதாநாயகன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது கனவு ஒன்று அவருக்கு வருகிறது.அந்தக் கனவில் பல ஆண்டுகளாகத் தேடி வரும் அந்தப் பெண் தோன்றுகிறாள். ” கனவில் நின்ற திருமுகம் ! கன்னியவள் புதுமுகம் ! ” பழைய திரைப்பட பாடலொன்று நினைவுக்கு வருகின்றது இந்தக் கதாநாயகனுக்கு.
இந்தப் படத்தில் வரும் கதாநாயகனுக்கு பெயர் இல்லை. பெயர் வைக்கவில்லையா ? பெயரே இல்லையா ? படத்தில் பெயர் வைக்கவில்லை என்றாலும் நிஜத்தில் நடிக்கும் கதைநாயகனுக்கு நிஜப் பெயர் உண்டு. நிவின் பாலி. மற்றொரு முக்கிய கதாபாத்திரத்திற்கும் பெயர் இல்லை. இதில் நடிக்கும் நடிகருக்கு நிஜத்தில் பெயர் உண்டு. அவர் பெயர் சூரி. தன் குடும்பத்தின் நலனுக்காக வெளிநாட்டில் கடுமையாக வேலை செய்து கடின உழைப்பால் கிடைத்த பணத்தினையும் குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் அள்ளிக் கொண்டு தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறார் சூரி .
இரயிலில் ஏறிய சூரி அந்த இரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கும் நிவின் பாலியை எழுப்புகிறார். அந்தச் சிறு நிகழ்வே இவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தையே மாற்றுகிறது.
ஏற்கனவே கனவில் தனது காதலியைப் பார்த்துக் கொண்டிருந்த சாகாவரம் பெற்ற மனிதனை எழுப்பியதால் எதிர்பாராத பிரச்சினையில் சூரி மாட்டிக் கொள்கிறார். அதன்பிறகு அந்த இரயில் பெட்டிக்குள் இருவருக்கிடையே நடைபெறும் உரையாடல்கள் , கருத்து மோதல்கள் மற்றும் பயணம் தான் படத்தின் முக்கியப் பகுதியாக மாறுகின்றது.
இருவரில் முன்னவருக்கு பல ஆயிரம் ஆண்டுகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவமும் பின்னவருக்கு குடும்பத்தையேச் சுற்றி வரும் சாதாரண மனித வாழ்க்கை .இந்த மாறுபடன உலகங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் சிக்கிக் கொள்வது கதைக்கு வித்தியாசமான சுவாரஸ்யத்தை உருவாக்குகிறது. இந்தப் பயணத்தில் சிறிய எலி ஒன்றும் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. சில நேரங்களில் இந்த இருவர்களின் தற்காலிக பிரிவினைக்கு காரணமாகவும் சில நேரங்களில் தற்காலிக பிரிவினையைத் தவிர்த்து இவர்களை ஒருங்கிணைக்கவும் இந்த எலி ஒரு கருவியாக நின்று செயல்படுகிறது.
நிவின் பாலி தான் ஆயிரம் கணக்கான ஆண்டுகளாக தேடி வரும் தனது காதலியை கண்டு பிடித்தாரா ? என்ற கேள்விக்கு விடை கிடைப்பது வழக்கம் போல தியேட்டரில் தான்.
வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு தன் குடும்பத்தைப் பார்க்கும் ஆவலுடன் பயணிக்கும் சூரி பாதுகாப்பாக வீடு போய் சேர்ந்தாரா ? இதற்கு இடையில் சிக்கிக் கொள்ளும் எலியின் கதி என்ன ? என்பதே மீதிக் கதை .
நிறையும் குறையும் :-
நிறைக்கு முன்பு குறையை சொல்லுவோம் :-
படத்தின் முதல் பாதி இரயில் பயணம். இதில் பெரும்பான்மையான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் வழக்கம் போல சூரி நகைச்சுவையை அள்ளி வழங்கினாலும் சிரிப்பு பெரிதாக வரவில்லை. நகைச்சுவை இரசனைக்கு ஏற்ப காட்சிக்கு ஏற்ப கதாபாத்திரத்திற்கு ஏற்ப சொன்னால் தான் எடுபடும். படத்தின் முதல் பாதி ஆமை வேகம். திரைக்கதையில் இயக்குநர் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நிறை :- படத்தின் முதல் பாதி ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் இடைவேளைக்கு முந்தன காட்சி சூடு பிடிக்கிறது. இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள் ஆர்வத்தை தூண்டுகின்றன.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவு :- இந்தப் படத்தின் ஒளிப்பதிவு முக்கிய பங்கு வகிக்கிறது. இயக்குநரின் எண்ணங்களை காட்சிகளாக தன்னுடைய ஒளிப்பதிவு மூலம் ஒளிப்பதிவாளர் வெளிப்படுத்தி இருக்கின்றார். இயற்கை எழில் நிறைந்த இடங்களை காட்சிமைப்படுத்தி கண்ணுக்கு விருந்து படைத்துள்ளார். பாராட்டலாமே !
இசை :- யுவன் சங்கர் ராஜா
இசை சில இடங்களில் மட்டுமே கவனத்தினை ஈர்க்கிறது. பின்னணி இசை வழக்கம் போல படத்திற்கு பலத்தைக் கொடுக்கிறது.
இயக்குநர் :- ராம். நல்ல இயக்குநர் . கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். வித்தியாசமான கதைக்களங்களை ஏற்படுத்தி பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் இயக்குநர் ராம் இந்தப் படத்தில் பின்னடைவு அடைய காரணமாகி விட்டார்.நகைச்சுவை கதையோடு ஒன்றினால் சிறப்பாக இருந்திருக்கும். படம் பார்க்கலாம்.
ஏழு கடல் ஏழு மலை என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் ஆய்வு செய்த போது வரலாற்று நிகழ்வானாலும் சரி , பக்திப் படமானாலும் சரி மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இது கற்பனைக் கதை அதற்கும் கண்ணு காது மூக்கு வேண்டும். காலம் மாறிப் போனது பார்த்துப் படம் பண்ண வேண்டும். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி உள்ளது. மீண்டும் சந்திப்போம். உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ;பி.எட், ராஜேஷ் ஓகே டேக்