‘ரூட் நம்பர் 17’ படத்துக்காக 5500 சதுர அடியில் பூமிக்கடியில் போடப்பட்ட குகை செட்
மூன்றுவித கெட்டப்புகளில் ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘ரூட் நம்பர் 17’
முப்பது வருட பழிவாங்கல் கதையாக உருவாகும் ‘ரூட் நம்பர் 17’
அத்துமீறி நுழைபவர்களை காவு வாங்கும் மரணப்பாதை ; ஜில்லிட வைக்கும் ‘ரூட் நம்பர் 17’
பாகுபலி லொக்கேஷன்.. காந்தாரா சவுண்ட் டீம்.. மிரட்டும் ‘ரூட் நம்பர் 17’
விமான பணிப்பெண் கதாநாயகியாக அறிமுகமாகும் ரூட் நம்பர் 17’

நேநி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள இயக்குநர் தம்பிகண்ணம் தானம் அவர்களிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதுமட்டுமல்ல இதே நிறுவனத்தின் தயாரிப்பில் 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்த ரூட் நம்பர் 17 படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானப்பணிப்பெண்ணாக பணியாற்றுபவர். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.



ஹரிஷ் பேரடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, காசி விஸ்வநாதன், டைடஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.




பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசேப்பசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, கு.கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
தெலுங்கில் த்ரிஷ்யம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஜாக்கி ஜான்சன் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் சவுண்ட் கிராபிக்ஸ் மற்றும் சவுண்ட் டிசைன் ஆகியவற்றை ராஜ கிருஷ்ணன் உள்ளிட்ட காந்தாரா படத்திற்கு பணியாற்றிய குழுவினர் தான் வடிவமைத்துள்ளார்கள்.
படம் பற்றி இயக்குநர் அபிலாஷ் கூறும்போது, “காட்டோடு சேர்ந்த பாதை என்பதுதான் இந்த படத்தின் தலைப்புக்கான அர்த்தம். முப்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு பாதை இப்போது மூடப்பட்டுள்ளது. இந்த பாதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்கள் எல்லாம் அன்றிரவே மரணத்தை தழுவுகிறார்கள். இதன் பின்னணியில் நெஞ்சை உருக்கும் காரணம் ஒன்று இருக்கிறது.
1990 முதல் 2020 வரை மூன்றுவித காலகட்டங்களில் நடக்கும் 30 வருட பழிவாங்கல் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. அதற்கேற்ப ஜித்தன் ரமேஷும் மூன்று வித கெட்டப்புகளில் நடித்துள்ளார். அதில் 90 கிலோ எடையுள்ள ஒரு வித்தியாசமான கெட்டப்பும் உண்டு. இதற்காக தேசியவிருது பெற்ற ஒப்பனை கலைஞர் ரஷீத் அஹமது இந்த படத்தில் பணியாற்றியுள்ளார்.
மலையாளத்தில் பிரித்விராஜ்-மோகன்லால் கூட்டணியில் உருவான ப்ரோ டாடி மற்றும் இதே கூட்டணியில், அடுத்து தயாராக இருக்கும் லூசிபர் 2 ஆகிய படங்களின் படத்தொகுப்பாளரான அகிலேஷ் மோகன் இந்த படத்தின் படத்தொகுப்பை கவனிக்கிறார். இவர் பாலிவுட்டில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் படங்களின் ஆக்ஷன் காட்சிகளை மட்டும் படத்தொகுப்பு செய்து கொடுக்கும் அளவிற்கு தனித்துவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய முதல் படமான தாய்நிலத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரசாந்த் பிரணவம் தான் இந்தப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த கதை மூன்றுவித காலகட்டங்களில், அதேசமயம் அடர்ந்த காடு, மிகப்பெரிய குகை, வறண்ட சமதள பகுதி என மூன்று விதமான இடங்களில் நடைபெறுகிறது இந்த மூன்றுக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் காட்டி உள்ளார் ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவம். டிஐ என்கிற கலர் கிரேடிங் செய்வதற்கு முன்பாக படத்தை பார்த்து பலரும் ஒளிப்பதிவு குறித்து தங்களது வியப்பையும் பாராட்டையும் வெளிப்படுத்தினார்கள்.
இந்த படத்தில் செந்தமிழ் தாசன் என்கிற கவிஞரை அறிமுகப்படுத்தியுள்ளோம். கவிஞரான இவர் முதன்முறையாக சினிமாவிற்கு பாடல் எழுதியுள்ளார். பின்னாளில் பெரிய பாடலாசிரியராக இவர் வலம் வருவார் என்பது உறுதி. ஸ்வேதா மோகன் ஒரு தாலாட்டு பாடலை பாடியுள்ளார். நிச்சயம் இதற்கு தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறோம். மேலும் பிராங்கோ மற்றும் லவ் மேகிங் பாடல்களைப் பாடும் ரீத்தா தியாகராஜன் ஆகியோரும் பாடல்களை பாடியுள்ளனர்.
இந்த படத்தின் கதை களம் தமிழகம் மற்றும் கர்நாடகா இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழ்கிறது. படப்பிடிப்பை கர்நாடக மாநிலம் குண்டல்பேட் மற்றும் தமிழகத்தில் தென்காசி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளோம்.
அதுமட்டுமல்ல இந்த படத்திற்காக 5500 சதுர அடியில் பூமிக்கு அடியில் ஒரு மிகப்பெரிய செட் அமைத்து 28 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இதுவரை சினிமாவில் யாரும் இப்படி ஒரு செட் போட்டது இல்லை. பாகுபலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற ஆந்திராவில் உள்ள கண்ணவம் என்கிற இடத்தில் இந்த குகை செட்டை அமைத்து படப்பிடிப்பை நடத்தினோம். படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் இந்த செட்டை பார்ப்பதற்கே பொதுமக்கள் நிறையபேர் வருகை தந்தனர்.
அதுமட்டுமல்ல தென்காசி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். யானை, புலி உலாவும் அச்சுறுத்தல் கொண்ட அந்த காட்டிற்குள் மாலை 6 மணிக்கு மேல் யாரும் நுழைய மாட்டார்கள்.. ஆனால் நாங்கள் இரவு 9 மணிவரை படப்பிடிப்பு நடத்தினோம். எங்களது படப்பிடிப்பு நாட்கள் எல்லாமே ஒரு திருவிழா மாதிரி, ஒரு ஜாலியான சுற்றுலா சென்று வந்தது மாதிரி மகிழ்ச்சியாக இருந்தது.
இப்படத்தின் முதற்பார்வையை நடிகர் ஜீவாவும், இரண்டாம் பார்வையை நடிகர் ஆர்யாவும் வெளியிட்டனர். இப்பார்வைகள் இப்போது வைரலாகி வருகிறது.
ஜனவரியில் இதன் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது” என்று கூறியுள்ளார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்
தயாரிப்பு ; அமர் ராமச்சந்திரன்
இயக்கம் ; அபிலாஷ் ஜி தேவன்
இசை ; அவுசேப்பச்சன்
ஒளிப்பதிவு ; பிரசாந்த் பிரணவம்
படத்தொகுப்பு ; அகிலேஷ் மோகன்
சவுண்ட் கிராபிக்ஸ் ; காந்தாரா டீம்
சவுண்ட் டிசைன் ; ராஜாகிருஷ்ணன் (காந்தாரா டீம் )
ஆக்சன் காட்சிகள் ; ஜாக்கி ஜான்சன்
ஒப்பனை ; ரஷீத் அஹமது (தேசிய விருது)
மக்கள் தொடர்பு ; A.ஜான்